1000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று 1000க்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா நோய்த்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் நோய்த்தொற்றின் பாதிப்பு…

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று 1000க்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கொரோனா நோய்த்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் நோய்த்தொற்றின் பாதிப்பு மிகத் தீவிரம் அடைந்து தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 1000க்கும் கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையைக் குறித்து இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 15,938 பேர் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 949 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், அதே நேரத்தில், இன்று மட்டும் 3,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.