தற்காலிக ஓட்டுநர்களால் ஆங்காங்கே நிகழ்ந்த விபத்துகள்!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 2வது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து,  தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய பேருந்துகள் சில பகுதிகளில் விபத்துக்குள்ளாகின. தமிழ்நாடு முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த…

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 2வது நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து,  தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய பேருந்துகள் சில பகுதிகளில் விபத்துக்குள்ளாகின.

தமிழ்நாடு முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று 2வது நாளை எட்டியுள்ளது.  இந்த வேலைநிறுத்தத்தில் CITU,  அண்ணா உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

இதனால் சில மாவட்டங்களில் பேருந்து சேவை முடங்கியுள்ளது.  சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.  முதல் நாளான நேற்று தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய சில பேருந்துகள் விபத்துக்குள்ளான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய சில பேருந்துகள் இன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன.  அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பணிமனையிலிருந்து,  மார்த்தாண்டதற்கு தற்காலிக ஓட்டுனர் இயக்கிய அரசு பேருந்து பிரேக் செயலிழந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த பேருந்து ஆற்றூர் அருகே மங்களாநடை பகுதியில் முன்னால் சென்ற மற்றொரு அரசு பேருத்தில் மோதி விபத்துக்குள்ளானது.  பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இதையும் படியுங்கள்:  2023 உலகின் அதிக வெப்பமான ஆண்டு – ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு அமைப்பு!

மேலும்,  உளுந்தூர்பேட்டை பகுதியை சார்ந்த தற்காலிக ஓட்டுநர் வெங்கடேஷ் பேருந்தை கள்ளக்குறிச்சி பணிமனையிலிருந்து கடலூர் இயக்கியுள்ளார்.  பின்னர் மீண்டும் கள்ளக்குறிச்சி சென்ற போது கடலூர் அண்ணா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து,  முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் புதுவண்டிப்பாளையம் பகுதியை சார்ந்த நாராயணசாமி என்பவரது கார் சேதமடைந்தது.

இதே போல்,  விளாத்திகுளத்தில் இருந்து பேரிலோவன் பட்டி வழியாக கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த தற்காலிக ஓட்டுனர் சுப்பிரமணியன் இயக்கிய அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவ, மாணவிகளும் மற்ற பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.