ஆவின் மூலம் விரைவில் குறைந்த விலையில் குடிநீர் பாட்டில் அறிமுகம் செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக குறைந்த விலையில் குடிநீர் பாட்டீலை அம்மா குடிநீர் திட்டம் என அறிவித்தார். இந்த பாட்டீல் ஒரு லிட்டரின் விலை ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் அதிமுக ஆட்சிக்கு முடிவுற்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த திட்டம் மீண்டும் வராதா என மக்கள் ஏங்கி கொண்டிருந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆவின் மூலம் விரைவில் குடிநீர் அறிமுகம் செய்யப்படும். 1 லிட்டர், 500 மில்லி லிட்டர் அளவுகளில் தண்ணீர் பாட்டில் தயாரிக்கப்படும். இவை ஆவினுக்கு சொந்தமான 28 சுத்திகரிப்பு நிலையங்களில் தயாரிக்கப்படும். அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஆவின் பால் பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனையடுத்து தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலரும், பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்கள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை நடைமுறைபடுத்துவது குறித்து பரிசீலனையில் உள்ளோம்.
பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது மூலம் ஆவின் நிறுவனத்தின் வருவாய் பெருகும் என அவர் கூறினார்.








