ஆவின் நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி சத்துகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட பசும்பால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‛பர்ப்பிள்’ நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் இந்த பாலின் விலை என்ன? இதிலுள்ள சத்துகள் என்னென்ன? இந்த பாலை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தற்போது காணலாம்.
தமிழ்நாடு அரசு பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், 27 மாவட்ட ஒன்றியங்களில் இருந்து, தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. இது கடந்த ஆண்டு சராசரி பால் விற்பனையை விட 3 லட்சம் லிட்டர் அதிகமாகும். பாலை தவிர்த்து ஆவின் சார்பில் ஐஸ்கிரீம், இனிப்பு, நெய் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவினில் தொடர்ந்து புதிதாக பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி சத்துகள் செறிவூட்டம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் இந்த பசும்பாலில், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெற்றுத் தருவதில் வைட்டமின் டி பங்களிப்பதனால், பாலில் செறிவூட்டம் செய்வது மிகவும் பயனளிப்பதாக இருக்கும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பாலில் 3.5 சதவீதம் கொழுப்பு சத்து நிறைந்து இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஆவினில் தற்போது Toned milk அதாவது சமன்படுத்தப்பட்ட பால், நீல நிறத்தில் NICE என்ற பெயரிலும், Standardised milk அதாவது நிலைப்படுத்தப்பட்ட பால், பச்சை நிறத்தில் Green Magic என்ற பெயரிலும், Double toned milk அதாவது இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் பிங்க் நிறத்தில் DIET என்ற பெயரிலும், Full cream milk அதாவது முழு கொழுப்பு நிறைந்த பால், ஆரஞ்சு நிறத்தில் Premium என்ற பெயரிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் செறிவூட்டப்பட்ட பசும்பால் Premium Cow Milk என்று பெயரிடப்பட்டு பர்ப்பிள் நிற பாக்கெட்டில் அரை லிட்டர் ரூ.22க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணூட்டச் சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசி, ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள நிலையில், தற்போது, பர்ப்பிள் நிறத்தில் செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை பொது மக்களிடையே வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை குறைக்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதிலும், பார்வையை மேம்படுத்துவதிலும், எலும்புகளை உறுதிப்படுத்துவதிலும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்…..







