முறப்பநாடு விஏஓ கொலை வழக்கை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட கோரி பொன்.காந்திமதி நாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கின் விசாரணை முறையாக சென்று கொண்டிருப்பதாகவும், குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் துணை காவல் கண்காணிப்பாளர் ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : ஆவின் ’பர்ப்பிள்’ பிரீமியம் பசும்பால் – இதில் என்ன ஸ்பெஷல்? முழு விவரம் இதோ…!
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குற்றப்பத்திரிக்கையை 4 வாரத்தில் ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதனை ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் 3 வாரத்தில் தூத்துக்குடி மாவட்ட நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வழக்கை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.







