மணிப்பூர் விவகாரத்தில் மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங், எஞ்சிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பி வருகின்றன. இதனால் கடந்த 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்றும் மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அப்போது அவை தலைவரின் உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக ஆம்ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் எஞ்சிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் நீக்கவைக்கப்பட்டார். இதற்கான தீர்மானத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கொண்டு வந்தார். அதற்கு அவையின் ஒப்புதலைப் பெற்ற மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எஞ்சிய மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சஞ்சய் சிங் நீக்கிவைக்கப்பட்டுவதாக அறிவித்தார்.
- பி. ஜேம்ஸ் லிசா








