ஒடிசாவின் 10 மாவட்டங்களில் அதிகன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து ஒடிசாவின் கஞ்சம், கஜபதி, ராயகாடா, மல்கங்கிரி, கோரபுட், நவரங்காபூர், நுவாபாதா கலஹந்தி,கந்தமால்போலாங்கிர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தெற்கு ஒடிசா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் பல இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 28 வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஒடிசா முழுவதும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று பிராந்திய வானிலை மையத்தின் மூத்த விஞ்ஞானி கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 6.4 மிமீ மழை பெய்துள்ளது, இது 7.9 மிமீ மழையை விட 19 சதவீதம் குறைவாக பெய்துள்ளது, பருவமழை இயல்பானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







