மதுரை அருகே இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய இளைஞர் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்ததுமே அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கோட்டப்பட்டியை சேர்ந்த இளைஞர் அழகுராஜா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறியது. அழகுராஜா, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பழகிவந்துள்ளனர்.
இந்தநிலையில், அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கடந்த 2019 ஆம் ஆண்டு அழகுராஜை அவரது வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் அந்த இளம்பெண் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு காவல்துறையினர் அழகுராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்ததும் சிங்கப்பூருக்கு தப்பிசென்றார். இவர் வெளிநாடு சென்றதால் கொட்டாம்பட்டி காவல்துறையினரால் லுக்அவுட் நோட்டீஸ் அப்போது வெளியிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பி வந்த அழகுராஜா லுக்அவுட் நோட்டீஸ் காரணமாக போலீசார் பிடித்து கொட்டாம்பட்டி காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மேலூரிலுள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
மீண்டும் இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த அழகுராஜா, காதலித்து ஏமாற்றிய அந்த இளம்பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். அவர் சிறையைவிட்டு வெளியே வந்தவுடன் அருகில் இருந்த காளியம்மன் கோயிலில் வைத்து அவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
– இரா.நம்பிராஜன்








