பாரம்பரியம் மாறாமல் நடந்த தோடர் பழங்குடியின தம்பதியினரின் திருமணம்

காலம் மாறினாலும் கலாச்சாரம் மாறாமல் , இயற்கையோடு இயற்கையாக, பாரம்பரிய முறைப்படி தோடர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த, இரு தம்பதிகளுக்கு வில் அம்பு சாஸ்திர திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. உதகை அரசு தாவரவியல்…

காலம் மாறினாலும் கலாச்சாரம் மாறாமல் , இயற்கையோடு இயற்கையாக, பாரம்பரிய முறைப்படி தோடர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த, இரு தம்பதிகளுக்கு வில் அம்பு சாஸ்திர திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியை, அங்கு வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர், பணியர், கோத்தார் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பூர்வகுடி இன மக்களான இவர்கள் திருமண விழாக்களையும், கோவில் நிகழ்ச்சிகளையும் இன்றும் பழமை மாறாமல் தங்கள் முன்னோர்களின் பாரம்பரிய வழிகாட்டுதலின் முறைப்படி நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள் பல நூற்றாண்டைக் கடந்து இன்றும் பாரம்பரியம் மற்றும் பழமை மாறாமல், திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள கார்டன் மந்து பகுதியில் மணமகன் நார் நஷ்குட்டன், மணமகள் கிர்ந்தனா சின் மற்றும் மணமகன் அர்ஜ் நேர்குட்டன், மணமகள் ஆஸ்வினி சின் ஆகிய இரு தம்பதிகளின் திருமணம் நடைபெற்றது.

இந்த தாவரவியல் பூங்காவில் இயற்கையான முறையில் நடத்தப்பட்ட இந்த வில் அம்பு சாஸ்திர திருமண விழாவின்போது இரு மணமகன், மணமகள் தம்பதிகள் தங்கள் முன்னோர்களிடம் வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர் மணமகன்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் தனது முன்னோர்களுடன் நடந்து சென்று , பூர்ஸ் என்ற சங்கரா பூ தாவரத்தில் உள்ள தண்டுகளில் இருந்து வில் மற்றும் அம்பு ஒன்றை உருவாக்கி அதை நாவல் மரத்தின் அடியில் காத்திருக்கும் ஐந்து மாத கர்ப்பமான மணமகள்களுக்கு கொண்டு சென்று வழங்குகின்றனர்.

அப்போது மணமகள்கள் அதை ஏற்றுக் கொண்டு நாவல் மரத்தின் அடியில் வைத்து நெய் தீப விளக்கேற்றி வில் அம்பினை வணங்கி மனமகள்கள் தன் கணவனைக் ஏற்றுக் கொள்கிறாள். இந்த விழாவினை வில் அம்பு சாஸ்திரம் மற்றும் குல நிர்ணய விழாவாகவும், தோடர் பழங்குடி மக்களால் திருமண விழாவாக கொண்டாடினர்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கார்டன் மந்தில் நடைபெற்ற இந்த தோடர் பழங்குடியினர் வில் அம்பு சாஸ்திர திருமண விழாவில் தோடர் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து கலாச்சார நடனம் ஆடி திருமண நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும் இது குறித்து தோடர் பழங்குடியினர் கூறுகையில், தோடர் பழங்குடி இன மக்களின் பாடல்களால், அமாவாசை அல்லது பெளர்ணமி தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக புதிய வாரிசாக பிறக்கும் குழந்தையை வரவேற்பதற்காக நடத்தப்படும் இந்த விழா, நூற்றாண்டைக் கடந்து இன்றும் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. இப்படி இயற்கையோடு இயற்கையாக நடைப்பெறும் வில் அம்பு சாஸ்திரம், குல நிர்ணய விழாவாகவும் மற்றும் திருமண விழாவாகவும் கொண்டாடுவதாக தெரிவித்தனர்.

நவீன காலத்தில் இயற்கையோடு இயற்கையாக நடைபெறும் தோடர் பழங்குடியினர் வில் அம்பு சாஸ்திர திருமண நிகழ்ச்சி காலம் மாறினாலும் கலாச்சாரம் மாறாமல் தங்கள் முன்னோர்களின் பாரம்பரிய வழிகாட்டுதலின்படி இன்றும் நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற வில் அம்பு சாஸ்திர திருமண நிகழ்ச்சியை பூங்காவிற்கு வருகை புரிந்த தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளா கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.