சபரிமலை ஐயப்பன் கோயில் புனிதமான பதினெட்டுப் படிகளிலும் பட்டு, மலர்கள் மற்றும் தீபங்கள் சமர்ப்பித்து முக்கிய சடங்குகளில் ஒன்றான படிபூஜை நடைபெற்றது. நடப்பு சீசனின் முதல் படி பூஜை நேற்று தொடங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் புனிதமான பதினெட்டுப் படிகளிலும் பட்டு, மலர்கள் மற்றும் தீபங்கள் சமர்ப்பித்து படிபூஜை நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விளக்குகளின் ஒளியில் ஒளிர்ந்த 18 படிகளை சன்னிதானத்தில் நேற்று மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். தீபாராதனைக்கு பின் தந்திரி கண்டர் ராஜீவரின் கார்மிக விழா நடந்தது. மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தலைமையில் ஒரு மணி நேரம் படி பூஜை நடந்தது. ஆரத்தியுடன் படி பூஜை சடங்குகள் நிறைவு பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பூஜையின் தொடக்கத்தில் 18ஆம் படியை முதலில் கழுவி பட்டு விரிப்பார்கள். பட்டின் இருபுறமும் பெரிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இருபுறமும் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு படியிலும் தேங்காய், பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் ஒவ்வொரு படியிலும் வசிக்கும் மலை தெய்வங்களுக்கு வழிபாடு செய்யப்பட்டது.
ஒவ்வொரு படியிலும் தெய்வங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டதும், சுவாமி தரிசனம் செய்த பக்தர்களும், தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களும் படிபூஜையை கண்டுகளித்தனர். சபரிமலையில் படிபூஜைக்கு 2037 வரை முன்பதிவு உள்ளது. இன்றும் தீபாராதனை முடிந்து படிபூஜை நடைபெறும்.