10ம் வகுப்பு படிக்கும் மாணவி மதிப்பெண் குறைவாக எடுத்ததால் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்று, 12 நாள் சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ஏரிக்கரை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் தீபிகா, காமலாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி, மதிப்பெண் குறைவாக எடுப்பதாக தீபிகாவின் தந்தை ரமேஷை அழைத்து பள்ளியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரமேஷ், தனது மகள் தீபிகாவிற்கு 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தால் தான் அடுத்து முதல் குரூப்பில் சேர்ந்து படிக்க முடியும். கல்லூரியிலும் நீ விரும்பிய பாடத்தை படிக்க முடியும் என்று அறிவுரைகள் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னால் அதிக மதிப்பெண் எடுக்க முடியவில்லை என்ற வேதனையில் இருந்த மாணவி தீபிகா, அவர்கள் வயலுக்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
பின்னர் மயங்கி கிடந்த மாணவியை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்து, உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 12 நாட்களாக மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி தீபிகா உயிரிழந்தார்.
மேலும், மாணவி உயிரிழப்பு குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி ஆசிரியர்கள், மாணவியின் பெற்றோர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி குழந்தைகள் மதிப்பெண்குறைவாக எடுப்பதாக கூறி, மாணவர்களை தொல்லை செய்ய வேண்டாம் என்றும் எத்தனையோ படிப்புகள் உள்ளன, அவற்றில் எதை படித்தாலும் வாழ்வில் முன்னேற்றமடைய முடியும். மாணவர்களும், மதிப்பெண் குறைவு என்பதால் மனம் தளர வேண்டாம். உயிரிழப்புக்கு முயற்சி செய்யக்கூடாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.







