சுட்டெரிக்கும் வெயில் – இரு சக்கர வாகனத்தில் குளித்தபடி சென்ற இளைஞர் – இணையத்தில் வைரல்!

கடலூரை சேர்ந்த இளைஞர் கத்தரி வெயில் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் குளித்தபடி சென்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது. இந்த மாதம்…

கடலூரை சேர்ந்த இளைஞர் கத்தரி வெயில் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் குளித்தபடி சென்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது. இந்த மாதம் 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருக்கும் என்பதால், இயல்பை விட வெப்பநிலை மேலும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.

அதே போல் கடலூர் மாவட்டத்திலும் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் பகலில் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சாலையோரத்தில் தர்பூசணி, இளநீர், நுங்கு, வெள்ளரிப்பழம், வெள்ளரிப்பிஞ்சு உள்ளிட்ட பல்வேறு கடைகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதில் சிலர் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பல புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கடலூர் பெண்ணாடத்தில் இளைஞர் ஒருவர், செய்த செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.  பெண்ணாடம் திருமலை அகரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் ஆக்டர் ராசு. 23 வயதான ராசு உச்சி வெயிலில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். ஒரு வாளியில் தண்ணீருடன் சென்ற அவர், கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் தண்ணீரை தலையில் ஊற்றியபடி சென்றார். பெண்ணாடம் பேருந்து நிலையம், திட்டக்குடி சாலை, மற்றும் விருத்தாசலம் சாலையிலும் குளித்து கொண்டு சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் ராசு குளித்தவாறு சென்றதை பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.