முக்கியச் செய்திகள் தமிழகம்

தண்டோரா தடை கடந்து வந்த பாதை !

தண்டோரா அறிவிப்பிற்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்து இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த தண்டோரா அறிவிப்பினை தடை செய்ய வேண்டும். இதில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் பயன்படுத்தப்படுகின்றனர். இது ஒரு வகையான தீண்டாமை என பல பத்தாண்டுகளாக பல்வேறு தரப்பினர் போராடி வந்தனர். இது குறித்த ஓர் பார்வை.

தாண்டோரா அறிவிப்பினை ஆதி திராவிடர்கள் மட்டுமே செய்து வந்தனர். பொதுமக்களுக்கு அரசின் சார்பில் ஏதாவது முக்கிய தகவல் சொல்ல வேண்டுமென்றால், அப்போது தாண்டோரா அடித்து ஊர் மக்களை ஓர் இடத்தில் கூடுவதற்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் பறையர் சமூக மக்களும், கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் மடிகாஸ் என்ற தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் தாண்டோரா அடிக்கின்றனர். ஓடிசாவில் டூம்போ என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.  இவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த முறை தற்போது ஒழிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நவீன காலத்திலும் தண்டோரா என்பது ஒடுக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயலாகவே சமூக ஆர்வலர்கள் பார்க்கின்றனர். இது சமூகநீதிக்கு எதிரானது என மனித உரிமை ஆர்வலர்களின் கருதுகின்றனர். இதனை மறைந்த அயோத்தி தாசர் பண்டிதர் காலத்திலேயே அவர் கடுமையாக எதிர்த்துள்ளார். கிராமங்களில் யாராவது இறந்து விட்டால் அந்த செய்தி அறிவிக்க தண்டோரா பயன்படுத்தபடுகிறது. அதேபோல், ஊரில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை மட்டும் பயன்படுத்துகின்றனர். இவைகள் எல்லாம் மனித உரிமை மீறல் என அக்காலத்திலேயே அயோத்தி தாசர் பண்டிதர் எதிர்த்துள்ளார்.

தண்டோரா முறையை ஒழிக்க வேண்டும் என 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கிணைந்த ஆற்காடு மாவட்டத்தில் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றன. இதுகுறித்து தலித் போராளி ஸ்டாலின் ராஜாங்கம் கூறியபோது, ஒருங்கிணைந்த் ஆற்காடு மாவட்டத்தில் தலித் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்கள் தங்களது சாதிய அடையாளம் காரணமாக தண்டோரா அடிக்க வேண்டும் என மற்ற சமூகத்தினர் நிர்பந்திப்பதாக கருதினர். இதன் வெளிப்பாடாக பல்வேறு தலித் அமைப்புகள் தாண்டோரா முறைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர் என்றார்.

மேலும், இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின் விளைவாக அங்குள்ள தலித் சமூக மக்கள் தண்டோரா அடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்னர். இந்த போராட்டம் வெற்றி பெற குடியரசு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் முக்கிய பங்காற்றின என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

தென் ஆற்காட்டில் தலித் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இளையபெருமாளின் கடும் போராட்ட முயற்சியால் அப்பகுதியில் தண்டோரா அடிக்கும் முறை வாபஸ் பெறப்பட்டது. கடந்த 1985 ஆம் ஆண்டு காட்டுமன்னார் கோவில் அருகேயுள்ள கருங்குடி கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்ற தலித் போராளி தண்டோரா முறைக்கு எதிராக போராடினார்.  அப்போது நடைபெற்ற கலவரத்தில் காவல்துறையினரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இதற்காக அவருக்கு இப்போதும் காட்டுமன்னார் கோவில் பேருந்து நிலையம் முன்பாக சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 1987ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள வாஞ்சிநகரம் என்ற கிராமத்தை சேர்ந்த கந்தன் என்ற 29 வயது இளைஞர் தண்டோராவிற்கு எதிராக போராடியதால் மாற்று சமூகத்தினரால் கொடூரமான முறையில் வெட்டி கொல்லப்பட்டார். இப்படி பல்வேறு போராட்டங்கள் தண்டோராவிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன.

இந்த தண்டோரா முறை ஒழிப்பு போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த 2006ஆம் ஆண்டு முதலே தண்டோரா முறையை ஒழிக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான டி.ரவிக்குமார் குரல் கொடுத்து வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடனே, அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக அவர் தொடர்ந்து போராடி வந்துள்ளார். இந்தநிலையில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்றபு தற்போது தண்டோரா முறைக்கு தடை விதித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஷின்சோ அபேவை கொலை செய்தது ஏன்? – கொலையாளி வாக்குமூலம்

Mohan Dass

ஏன் இந்த மின்னல் வேகம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Jayakarthi

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்-மர்ம நபர்கள் காவல் நிலையத்திற்கு கடிதம்

G SaravanaKumar