முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓ.பி.எஸ் நான்கு தளபதிகளின் கதை

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை ஏற்பட்டவுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்த நிர்வாகிகள் பலர் எதிர் முகாமிற்கு தாவி விட்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 4 பேர் மட்டும் அவருடன் தொடர்ந்து பயணித்து வருகின்றனர். இவர்கள் எடப்பாடி பழனிசாமி முகாமிற்கு சென்று இருந்தால், வெகு சிறப்பாக கவனிக்கப்பட்டு இருப்பார்கள். அதனை அவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. தொடர்ந்து ஓபிஎஸின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கும் ஓபிஎஸிற்கும் ஏன் இந்த நெருக்கம் ? எடப்பாடி பழனிசாமி மீது இவர்களுக்கு என்ன கோபம் ? போன்ற கேள்விகளோடு களமிறங்கினோம். அதற்கு கிடைத்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.

யார் இந்த வைத்தியலிங்கம் ?

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நால்வர் அணி என அழைக்கப்பட்ட அணியில் முக்கிய தளபதியாக விளங்கியவர். அந்த காலகட்டத்தில் இந்த அணி மீது ஜெயலலிதாவிற்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் நால்வர் அணி செய்த தவறுகள் என்ன என்பதை அப்ரூவராக மாறி ஜெயலலிதாவிடம் நடந்த உண்மைகளை ஒப்புவித்தவர் எனக் கூறபடுகிறது.

அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் நின்று தோல்வியுற்றார். இருப்பினும் தம்மிடம் உண்மையாக நடந்து கொண்ட காரணத்திற்காக ஜெயலலிதா அவரை மாநிலங்களவைக்கு உறுப்பினராக அனுப்பினார்.

ஜெயலலிதாவிடம் தங்களை போட்டு கொடுத்தது சசிகலாதான் என்ற எண்ணம் வைத்தியலிங்கத்திற்கு உண்டு என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2016 சட்டமன்ற தேர்தலில் தாம் தோற்பதற்கு மிக முக்கிய காரணம் சசிகலா குடும்பம்தான் என அவர் நம்புவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அமைதியாக இருந்தவர் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு அணிகளும் இணைந்தபோது ஓபிஎஸ் உடன் மீண்டும் நெருக்கம் காட்ட தொடங்கினார். அன்று முதல் இன்று வரை அதே விசுவாசத்துடன் பன்னீர் செல்வத்தின் முதல் தளபதியாக விளங்குகிறார்.

இது ஒருபுறமிருக்க எடப்பாடி பழனிசாமி தமக்கு சமமானவர் இல்லை என்ற கருத்து வைத்தியலிங்கத்திற்கு உண்டு. அதுவும் அவரை தற்போது வரை எதிர்க்க காரணம் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது குடும்ப துக்க நிகழ்விற்கு கூட எடப்பாடி செல்லவில்லை, அறிக்கையும் கொடுக்கவில்லை. அந்தளவிற்கு இருவருக்கும் பனிப்போர் இருந்து வந்தது.

யார் இந்த வெல்லமண்டி நடராஜன் ?

திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரான வெல்லமண்டி நடராஜனுக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமாருக்கும் ஏழாம் பொருத்தம் என கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே திருச்சியில் அதிமுகவில் யார் பெரியவர் என்ற ஈகோவில் உள்ளனர். வெல்லமண்டி நடராஜன் திருச்சி அதிமுகவின் மாநகர் மாவட்டச் செயலாளர். குமாரோ திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஆவர். இவர்களில் வெல்லமண்டி நடராஜனை பொருத்தவரையிலும் திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவராக இருந்தது முதல் அமைச்சரானதுவரை ஓபிஎஸ் மூலமே கட்சியின் அதிகார வரம்புகளில் பயணித்து வந்திருக்கிறார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலம்தொட்டு ஓபிஎஸ் மூலமே தலைமைக்கு நெருக்கமானவர். குமாரை பொறுத்தவரை தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு முறையாவது அமைச்சராக வேண்டும் என்ற கனவோடு பயணிப்பவர். அதற்கு வெல்லமண்டி நடராஜன் இடைஞ்சலாக இருப்பதால், எடப்பாடி பக்கம் உள்ளார். அதுமட்டுமில்லாமல், குமாரோடு முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி, சிவபதி, வளர்மதி மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் எல்லோருடைய அரசியல் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் தடையாக வெல்லமண்டி நடராஜன் இருப்பதாக கருதுகின்றனர். இப்படி தனக்கு எதிராக வரிசை கட்டி நிற்பவர்களை வீழ்த்துவதற்கு தம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் ஓபிஎஸ் என அவர் கருதுகிறார். இதுவே இவர் ஓபிஎஸ் உடன் பயணிக்க முக்கிய காரணம் கூறப்படுகிறது.

யார் இந்த மனோஜ் பாண்டியன் ?

அதிமுகவில் உள்ள சட்ட வியூக வகுப்பாளர்களில் மிக முக்கியமானவர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய தளபதிகளில் இவரது குடும்பமும் ஒன்று. இவரது தந்தை மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் ஆவர். ஜெயலலிதா மீது தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை கையாண்ட சட்ட நிபுணர்கள் குழுவின் தலைமை தளபதி ஆவார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் சசிகலாவை எதிர்த்து யாரும் பேச மாட்டார்கள். அந்த காலகட்டத்தில் சசிகலாவின் தவறுகளை துணிச்சலாக ஜெயலிதாவின் காதுகளுக்கு எடுத்து சென்றவர் மனோஜ் பாண்டியனின் தந்தை பி.எச்.பாண்டியன் என கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதே சசிகலாவால்தான் என நேரடியாக குற்றம்சாட்டினார் மனோஜ் பாண்டியன். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின்னர்தான் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கினார். அந்த காலகட்டத்தில்தான் ஓபிஎஸிற்கும் இவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.  சசிகலாவை முதலமைச்சராக வேண்டும் என ஜெயலலிதாவின் மறைவின்போது பல்வேறு கருத்துகள் எழுந்தபோது, மனோஜ் பாண்டியன் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். அது, ‘சசிகலா அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்ற நிலையில் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக தலைமை செயலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசினார், அதனை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். என்னிடம் பேசிய ஜெயலலிதா பெரும் கூட்டம் எனுக்கு எதிராக சதிசெய்கிறது என்னை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க முயற்சி செய்கிறார்கள் என்றார்.

இதனையடுத்து சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றினார். அதற்கு பின்னர் முக்கியமான பணிகளை எங்களிடம் வழங்கினார் அவர்களுக்கு நாங்கள் ஆலோசனை வழங்கினோம், ‘ என்றார் மனோஜ் பாண்டியன்.

மேலும் அவர் கூறியதாதவது, சில மாதங்கள் கழித்து மன்னிப்பு கோரி சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் வந்தார். அப்போது நாங்கள் வருத்தம் அடைந்தோம் அப்போது ஜெயலலிதா எங்களில் 5 பேரை மாடிக்கு அழைத்தார். ஒவ்வொருவரையாக பார்த்த போது, சசிகலா குடும்பத்தினரை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன் என்று உறுதியளித்தார்  எனக் கூறினார். இப்படி அதிமுகவில் பல்வேறு அதிரடிகளுக்கு சொந்தகாரரான மனோஜ் பாண்டியன்தான் இன்று ஓ.பி.எஸிற்கு மிகவும் ஆதரவாக செயல்படுகிறார்.

யார் இந்த ஜேசிடி பிரபாகர் ?

திண்டுக்கலை பூர்விகமாக கொண்ட ஜேசிடி பிரபாகர் சென்னை அரசியலில் களம் கண்டு வருகிறார். இவர் பல்வேறு கல்வி நிறுவனங்களில் கெளரவ பதவிகள் பலவற்றை வகித்து வருகிறார். இவர் தன்னை ஒரு அறிவுசார் சமூகத்தை சேர்ந்தவர் என்ற பிம்பத்தை மக்களிடையே உருவாக்கி வைத்துள்ளார். மிகவும் வசதியான குடும்பத்தை சார்ந்த இவர் ஆரம்பகாலத்தில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தார். பின்னர் சிறிது காலம் ஜெயலலிதாவால் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மீண்டும் ஜெயலிலதாவின் நம்பிக்கைகுரிய நபராக வலம் வந்தார். இது ஒருபுறமிருக்க இவருக்கு அரசியலில் வாய்ப்புகள் என்பதை மிகவும் காலம்கடந்தே கிடைத்தது. அதற்கு காரணம் சசிகலா போட்ட தடைகளே என கூறப்படுகிறது.

வழக்கறிஞராக தமது வாழ்க்கை தொடங்கி இவர், அரசியலில் கடந்த 1977 முதலே உள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2011ஆம் ஆண்டு வில்லிவாக்கம் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அதற்கு பின்னால் இருந்து உதவியவர் ஓபிஎஸ் என கூறப்படுவது உண்டு. இவரும் அதிமுகவில் சசிகலாவால் பாதிக்கப்பட்டவர் என்பதால் ஓபிஎஸின் தர்மயுத்தத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். அன்று தொடங்கிய ஓபிஎஸ் நிலைப்பாடு இன்று வரை தொடர்கிறது. சிறுபான்மை மக்களிடையே ஜேசிடி பிரபாகர் மிகவும் பிரபலமானவர். இது ஓபிஎஸ் தற்போது பல்வேறு இடங்களில் கை கொடுத்து வருகிறார். குறிப்பாக பாஜக ஆதரவு என்றாலும், ஜேசிடி போன்று சிறுபான்மையின தலைவர்கள் தம்மோடு இருப்பது தமக்கு பெரிய பலம் என்றே ஓபிஎஸ் கருதுவதாக தெரிகிறது.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்; டெல்லி சென்ற முதலமைச்சர்!

Arivazhagan Chinnasamy

ரொனால்டோவின் ஆர்ம் பேண்ட் ஏலம்!

Dhamotharan

தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரி முதலமைச்சருக்கு, ஓ.பி.எஸ். கோரிக்கை!

Jeba Arul Robinson