“தவெக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது” – டிடிவி தினகரன்!

அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களுக்கு தூண்டுகோலாகவும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் பார் உரிமையாளரால் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் காவல் நிலையம் அருகிலேயே சரவணன் என்ற நபர் ஓட ஓட வெட்டிக் கொலை, மதுரை மேலூர் அரசுப் பள்ளி அருகே செல்லத்துரை என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை, சென்னை புறநகர் குன்றத்தூர் அருகே தண்டலத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை, தாம்பரத்தில் வெல்டர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை, கரூரில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் உள்ளிட்ட ஒரே நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 8 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதிலும், அவர்களுக்குத் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதிலும் ஏற்படும் காலதாமதமும், அலட்சியமுமே இதுபோன்ற அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களுக்கு தூண்டுகோலாகவும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூகவிரோதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்காணித்து, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவேண்டிய காவல்துறையினர் தங்களது அடிப்படைப் பொறுப்பை உணராமல் அலட்சியமாகச் செயல்படுகின்றனரா ? அல்லது அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதா ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதேநேரத்தில், தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைத்து, பதற்றமான சூழலை அதிகரிக்கும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு முக்கியம் என்பது அவருக்கு புரிகிறதா? அல்லது புரிந்தும் தனது நிர்வாக திறமையின்மையால் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாரா? என்ற கேள்வியம் எழுகிறது.

எனவே, தமிழகத்தில் தினம் தோறும் அரங்கேறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கையை மேற்கொள்வதோடு, அரங்கேறிய படுகொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, கடுமையான தண்டனை பெற்றுத் தருவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் காவல்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.