டெல்லி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சுகாதார சேவைகளை நீதிமன்றம் கண்காணிக்கும் விதத்தில் தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரதீபா.எம்.சிங் மற்றும் மன்மீத் ப்ரீத்தம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டெல்லி குரு தேஜ் பகதூர் அரசு மருத்துவமனையில் 400 வென்டிலேட்டர்களும், 910 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் பயன்படுத்தப்படாமல் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், அத்தகைய உபகரணங்களை இயக்குவதற்கான மருத்துவர்கள், தகுதி வாய்ந்த பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நியமனங்களில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். குறிப்பாக, தேவையான மருத்துவர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தகுதியான பணியாளர்களைப் போதுமான அளவு நியமிக்காததால், மதிப்புமிக்க உபகரணங்களும் பயன்படுத்தப்படாமல் கிடப்பதாகவும், மருத்துவமனைகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றன எனவும், அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
மேலும், நியமனங்கள் விவகாரத்தில் டெல்லி அரசிடம் சீரான மனிதவளக் கொள்கை எதுவும் இல்லை,” என்று சுட்டிக்காட்டியதோடு, பணியாளர்கள் நியமன விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு அரசு மருத்துவமனையுடனும் ஒரு புதிதாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்துமாறு டெல்லி சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.
அதேபோல, உள்ளூர் மட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புக்கு பதிலாக, இந்த விவகாரத்தை மையப்படுத்தப்பட்ட முறையில் கையாள வேண்டும் என்றும், மருத்துவமனைகளில் அவசர உதவிக்கான அழைப்புகளை கையாள பணியாளர்களை அதிகரிப்பதும், இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் உரிய முடிவை எடுக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.




