தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தி, தமிழ்நாடு அரசின் சார்பில் தனித் தீர்மானம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதில், சட்டமன்றப் பேரவை விதி 92ல் அடங்கியுள்ள ‘…CONDUCT OF ANY GOVERNOR’ என்னும் பதம் மற்றும் ‘…USE THE GOVERNORS NAME FOR THE PURPOSE OF INFLUENCING A DEBATE’ என்னும் பதம் மற்றும் விதி 287-ல் அடங்கியுள்ள பதம் ஆகியவற்றின் பயன்பாடுகளை நிறுத்தி வைப்பதற்கான அரசினர் தனித் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பான விவகாரத்தில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் வாயில் கதவுகளை மூட சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள் : எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் – சட்டபேரவையில் அதிமுக வெளிநடப்பு
பின்னர் தீர்மானத்தை முன்மொழிவதற்கு சட்டப்பேரவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்பதால் எண்ணிக் கணிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். அதன்படி, சட்டப்பேரவைக்குள் இருக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பெயரும் வாசிக்கப்பட்டு எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு கணக்கெடுக்கப்பட்டது.
சட்டப்பேரவை 6 பகுதிகளாக உள்ள நிலையில், 4 பகுதிகளில் இருந்த உறுப்பினர்கள் தனித் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். பகுதி 5ல் அமர்ந்திருந்த பாஜக உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி மற்றும் சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்தனர். பகுதி 6ல் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதனை தொடர்ந்து, 144 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.







