இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இன்றைய பேரவை கூட்டத்தில், மாநில மொழிகளின் நலனுக்கு எதிராக பரிந்துரைகளை மத்திய அரசு நடைமுறைபடுத்தக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நேற்று தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் கூடியதும், இங்கிலாந்து ராணி, முலாயம் சிங், முன்னாள் பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி பேரவை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நடைபெற்ற ஆய்வுகுழு கூட்டத்தில் பேரவை கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெறும் என பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு இரண்டாவது நாளாக கூடவுள்ளது. கேள்வி நேரத்துடன் தொடங்கும் இன்றைய கூட்டத்தில் குழுக்களின் அறிக்கை அளிக்கப்படுகின்றது.
2022 தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் திருத்தச்சட்ட முன்வடிவு, 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்தச் சட்டமுன்வடிவுகள், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் திருத்தச் சட்டமுன்வடிவு, 2022 ஆம் ஆண்டு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் திருத்தச்சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்படவுள்ளது
.
2022-23 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையினை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளிக்கவுள்ளார். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் நலனுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. மேலும் ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் பேரவையில் வைக்கப்படுகின்றது. அதிமுகவினரால் அளிக்கப்பட்ட 6 கடிதங்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டால், சபாநாயகர் விளக்கம் அளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.