மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்த ஒருவர், அதன் முடிவு வருவதற்கு முன்பே பயத்தில் கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த 30 வயது நபருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து கடந்த 14ம் தேதி இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவுக்கு காத்திருந்த நிலையில், கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்துவிடும் என்ற அச்சத்தால் தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். பின்னர், இது குறித்து போலீசாரிடம் தகவல் அளித்தனர். மருத்துவமனைக்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியானது. மேலும், அவருடைய உயிரிழப்புக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என்பதும் தெரியவந்துள்ளது.







