“திமுக ஆட்சியால் தேர்தல் காலத்திலும் தொடரும் கொடூர குற்றங்கள்” – நயினார் நாகேந்திரன்!

தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கூட, கொடூர குற்றங்கள் பெருகுவது, திமுக ஆட்சியால் ஒட்டுமொத்த தமிழகமும் குற்றங்களின் கூடாரமாகவே உள்ளது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியில், கஞ்சா போதையில் இருந்த இரு இளைஞர்கள் 66 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாகச் சீரழிந்ததற்கான சிறந்த சாட்சி!

திமுகவின் 5 ஆண்டுகால கொடூர ஆட்சியால், தமிழகத்தின் நாலாப்புறமும் கஞ்சா புழக்கம் தலைவிரித்தாடி இளைஞர்களின் வாழ்வு பாழாவதோடு வயது வரம்பின்றி அனைத்துதரப்பட்ட தமிழகப் பெண்களின் பாதுகாப்பும் பறிபோய் வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கூட, கொடூர குற்றங்கள் பெருகுவது, திமுக ஆட்சியால் ஒட்டுமொத்த தமிழகமும் குற்றங்களின் கூடாரமாகவே மாறிவிட்டதை உணர்த்துகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திறனற்ற நிர்வாகத்தால் அரங்கேறிய இந்த கொடூரத்தைப் பார்த்த பின்பு, இனி என்றுமே அறிவாலயம் ஆட்சியில் அமர்த்தமாட்டார்கள் தமிழக மக்கள்! இது நிச்சயம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.