சேலம் அருகே காதல் மனைவிக்கு சிலை வைத்த அன்பு கணவரின் செயல் அனைவருக்கும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாமாங்கம் கிளாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இருசன். தனது மனைவி நீலாவிற்காக ஆசைஆசையாய் புதுவீடு கட்டிவந்த நிலையில், கடந்தாண்டு பாம்பு கடித்து நீலா உயிரிழந்தார். மனைவியின் நினைவுகளுடன் வாழ்ந்து வந்த இருசன், தான் கட்டும் புதுவீட்டில் மனைவி நீலாவும் மகிழ்வுடன் வாழ வேண்டும் என எண்ணினார். அந்த ஆசை பொய்த்து போன நிலையில், தனது வீட்டிற்கு நீலா இல்லம் என மனைவியின் பெயர் வைத்த இருசன், புதிய வீட்டில் தனது மனைவிக்கு சிலை வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
திருமணத்திற்கு பின்பு தனது மனைவியை ஒருநாளும் பிரிந்து இருந்ததே கிடையாது.
மனைவியின் நினைவால் சிலை அமைத்து தன்னுடன் இன்றும் துணையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மனைவி பயன்படுத்திய நகைகளை
சூடி அழகு பார்த்துள்ளார்.
இது குறித்து இருசன் கூறியதாவது தனது மனைவி இல்லாத வாழ்க்கையை அவருடன் வாழ்ந்த நினைவுகளுடன் கழித்து வருவதாகவும், மனைவியின் புகைப்படங்களை வீடு முழுவதும் மாற்றி வைத்து மனதை தேற்றிக் கொள்வதாகவும் அவர் கூறினார். 
அவரைத் தொடர்ந்து இருசன்-நீலா தம்பதியின் மகள் கஸ்தூரி அளித்த பேட்டியில், கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக தனது தாயும் தந்தையும் வாழ்ந்ததாக உருக்கத்துடன் கூறினார். மேலும் தாய் இல்லாத இடத்தில் தாயாக இருந்து தங்களை தங்களது தந்தை பாதுகாத்து வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசுகையில் வீட்டிலிருந்து எந்த வேலைக்கு சென்றாலும் அம்மாவின் சிலையை வணங்கி செல்வதாகவும், இந்த சிலை அமைக்கப்பட்டதன் மூலம் அம்மா எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருப்பதாக பெருமிதத்துடன் கூறினார். புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட இந்த சிலையை உற்றார் உறவினர்கள்
பிரம்மிப்போடு பார்த்து சென்றனர்.








