11 ஆண்டுகள் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய வழக்கறிஞர் – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

அடித்து துன்புறுத்துவது வெளியே தெரியாமல் இருக்க, மனைவியை வீட்டிற்குள் 11 ஆண்டுகள் அடைத்து வைத்த வழக்கறிஞர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெண்ணை மீட்ட போலீசார். பதறவைக்கும் இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.…

அடித்து துன்புறுத்துவது வெளியே தெரியாமல் இருக்க, மனைவியை வீட்டிற்குள் 11 ஆண்டுகள் அடைத்து வைத்த வழக்கறிஞர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெண்ணை மீட்ட போலீசார். பதறவைக்கும் இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்தவர் சாய் சுப்ரியா. இவருக்கும் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனனுக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வழக்கறிஞரான மதுசூதனன், தனது மனைவியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மனைவியை அடித்து துன்புறுத்துவது யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக 11 ஆண்டுகளாக சாய் சுப்ரியாவை வீட்டில் உள்ள இருட்டு அறையில் அடைத்து மதுசூதனன் பூட்டி வைத்துள்ளார். பெற்றோர் பலமுறை முயன்றும் மகளுடன் பேச இயலவில்லை. மகளை சந்திக்க நேரடியாக பலமுறை வீட்டுக்கு வந்தும் மதுசூதனன் சந்திக்க விடவில்லை என தெரிகிறது.

இதையும் படியுங்கள் : கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுக

இவ்வாறு 11 ஆண்டுகள் பொறுமையுடன் இருந்த சாய் சுப்ரியாவின் பெற்றோர், பிப். 28ம் தேதி மகள் சாய் சுப்ரியாவை, மருமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 11 ஆண்டுகளாக வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சாய் சுப்ரியாவின் பெற்றோருடன் மதுசூதனன் வீட்டுக்கு சென்றனர். அப்போது மதுசூதனன், தன்னுடைய வீட்டுக்குள் நுழைய அனுமதி உள்ளதா? என காவல்துறையினரிடம் தகராறு செய்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்ற அனுமதியோடு வீட்டிற்குள் போலீசார் நுழைந்தனர். தனி அறையில் சாய் சுப்ரியா அடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோரை பார்த்ததும் சாய் சுப்ரியாவும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரை மீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று போலீசார் ஆஜர்படுத்தினர். மிகவும் மெலிந்த தேகத்துடன் காணப்பட்ட சாய் சுப்ரியாவை பார்த்த நீதிபதி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க உத்தரவிட்டார்.

11 ஆண்டுகள் மனைவியை தனியாக அடைத்து வைத்திருந்த மதுசூதனன், மனித உரிமை ஆணையத்தின் மாவட்ட துணைத் தலைவர் என்று கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு சாய் சுப்ரியாவின் வாக்குமூலத்தை பெற்று, மதுசூதனன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 11 ஆண்டுகளாக பெண்ணை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.