சீனாவுடன் தொடர்புடைய பெட்டிங் மற்றும் கடன் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு கருதி, சீனாவுடன் தொடர்புடைய ஆப்களுக்கு மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தடை விதித்து வருகிறது. அதன்படி மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கட்டமாக 59 ஆப்களுக்கு தடை விதித்தது. இவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் விதமாக செயல்பட்டதால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதே 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஆப்களுடன் தொடர்பில் இருந்த 47 ஆப்களை தடை செய்தது.
இதே காரணத்துக்காக 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டும் 118 ஆப்கள் தடை செய்யப்பட்டன. அதே ஆண்டு ஆண்டு நவம்பர் மாதம் 43 ஆப்கள் தடை செய்யப்பட்டன. கடந்தாண்டு கூட இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் விதமாக செயல்பட்ட 54 சீனா ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. பயனாளர்களின் முக்கிய தரவுகளை எடுப்பதற்கு அனுமதி கேட்ட அந்த ஆப், அதில் கிடைத்தத் தரவுகளை குறிப்பிட்ட விரோத நாட்டுக்கு அனுப்பப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில், அதே ஆப்களின் நகலாக செயல்பட்ட 138 பெட்டிங் ஆப்கள் மற்றும் 94 கடன் ஆப்களுக்கு மத்திய அரசு தற்போதுத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஆப்களும் சீனாவுடன் தொடர்புடையவையாகும். மத்திய உள்துறை அமைச்சகம் அவசரகால எச்சரிக்கையில் செய்த பரிந்துரையின் அடிப்படையில், மத்திய தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
-ம.பவித்ரா








