வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தில் பாலாறு நகர் பகுதியில் வீடு ஒன்று கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டது.
வடதமிழ்நாட்டிற்கு தென்கிழக்காக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறி வடதமிழகத்தை நெருங்கியது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர் உட்பட 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் நிலை கொண்டிருந்தது.
இது இன்று அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் புதுச்சேரி – சென்னை இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணி அளவில் புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே கரையைக் கடக்க தொடங்கிய நிலையில், 4 மணி நிலவரப்படி முழுமையாக கரையை கடந்தது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகளில் வெள்ளநீர் ஓடுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியாத்தம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தில் பாலாறு நகர் பகுதியில், கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த வீடு ஒன்று இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக அந்த வீடு இடிந்து விழும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.








