நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி, ராஞ்சியில் இன்று நடக்கிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. முதல் டி-20 கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணியில் மார்டின் குப்தில் அபாரமாக ஆடி 70 ரன்கள் விளாசினார். மார்க் சாப்பன் 63 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா 48 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 62 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் இரண்டாவது டி-20 போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. நியூசிலாந்து அணி, பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக இருக்கிறது. கடந்த போட்டியில் கூட, கடைசிவரை போட்டியை இழுத்துச் சென்று இந்திய அணியை திக்கு முக்காட வைத்தது. கேன் வில்லியம்சனுக்கு பதிலாக களமிறங்கிய மார்க் சாப்பன் முதல் போட்டியிலேயே மிரட்டினார். இன்றைய போட்டியிலும் அவர் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்திய அணியில், அசத்தலான பேட்டிங் வரிசை இருந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயர் தடுமாறுகிறார். பந்துவீச்சில் முகமது சிராஜ், தீபக் சாஹர் பந்துவீச்சை நியூசிலாந்து வீரர்கள் விளாசித் தள்ளினர். புவனேஸ்வர்குமார், அஸ்வின், அக்ஷர் படேல் சிறப்பாக பந்துவீசுகின்றனர். இன்றைய போட்டியை வென்றால் தொடரைக் கைப்பற்றிவிடலாம் என்பதால், இந்திய அணி கடுமையாகப் போராடும்.
அதே நேரம் நியூசிலாந்து அணியும் வெற்றிக்காக போராடும். இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இரவு 7.30 மணிக்கு போட்டி நடக்கிறது. போட்டி நடக்கும் ராஞ்சியில் இதுவரை 2 டி-20 போட்டிகள் மட்டுமே நடந்துள்ளது. இரண்டிலும் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது. பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், இன்றைய போட்டியிலும் டாஸ் முக்கியத்துவம் வகிக்கும். டாஸ் வெல்பவர்கள் சேசிங்கை தேர்வு செய்வார்கள் என்று தெரிகிறது.
உத்தேச அணி விவரம்:
நியூசிலாந்து : டிம் சவுதி (கேப்டன்), மார்டின் குப்தில், டேரில் மிட்செல், மார்க் சாப்பன், கிளன் பிலிப்ஸ், டிம் செப்பர்ட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சண்ட்னர், டிரெண்ட் போல்ட், பெர்குசான், இஷ் சோதி
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், அக்சர்படேல் அல்லது சாஹல், தீபக் சாஹர், அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது சிராஜ்.









