மத்தியபிரதேச மாநிலத்தில் முங்காவல்லி என்னும் கிராமத்தில் கடந்த 6 ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது சிறுமி உயிரிழந்தார்.
மத்திய பிரதேசத்தின் சேகோர் மாவட்டத்திற்கு உட்பட்ட முங்காவல்லி கிராமத்தில் கடந்த 6 ஆம் தேதி தனது வீடு அருகிலுள்ள பண்ணை நிலப்பகுதியில் சிருஷ்டி குஷ்வாகா என்கிற இரண்டரை வயது சிறுமி விளையாடியுள்ளார். தனது பாட்டி கண்முன்னே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கே மூடாமல் விடப்பட்டிருந்த 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். இதில் 30 அடி ஆழத்தில் சிறுமி சிக்கிக்கொண்டார். இதனை அடுத்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் மீட்பு பணியை முடுக்கிவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறுமிக்கு தொடர்ந்து குழாய் வழியாக ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது. இதனிடையே தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் களம் இறக்கப்பட்டனர். பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆழ்துளை கிணறு அருகே குழி நோண்டப்பட்டு சிறுமியை மீட்பதற்கான முயற்சி நடைபெற்றது.
மண்ணை தோண்டும் பணி நடைபெற்ற போது பாறை வந்ததால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. குழந்தையிடம் அசைவு ஏதும் இல்லாததால் அனைவரும் கவலை அடைந்தனர். இதனை அடுத்து ரோபோ உதவியுடன் ஆழ்துளை கிணற்றிலிருந்து சிறுமியை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2 நாட்களுக்கும் மேலாக நடந்த போராட்டத்திற்கு பிறகு சிறுமியை சுயநினைவில்லாத நிலையில் மீட்பு குழுவினர் மீட்டனர். அங்கே தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் குழந்தையை பரிசோதனை செய்து பார்த்ததில் குழந்தை ஏற்கனவெ உயிரிழந்தது தெரியவந்தது. இச்செய்தி அனைவரையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.