திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே மாடு வைத்து உழுவதற்கோ
டிராக்டர் வைத்து உழுவதற்கோ வசதி இல்லாமல், தனது மகன் உதவியுடன்
சைக்கிளை வைத்து உழுது விவசாயம் செய்து வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஒபுளாபுரம் கிராமத்தில்,
வசிப்பவர் பரிமளம். இவர் 40 சென்ட் நிலத்தை வைத்து விவசாயம் செய்து வரும் ஒரு சிறு விவசாயி ஆவார். தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தன் தந்தை விட்டு சென்ற நிலத்தை வைத்து தான், தன் குடும்பம் பிழைப்பு நடத்தி வருவதாக பரிமளம் கூறுகின்றார்.
40 சென்ட் நிலத்தை மாடுகள் வைத்தோ டிராக்டர் வைத்தோ உழுவதற்கு வசதி
இல்லாததால், என்ன செய்வது என்று அறியாத பரிமளம் தன் வீட்டிலிருந்த
உடைந்த சைக்கிளை வைத்து ஏர் கலப்பையினை கொண்டு, சைக்கிளில்
பெடல்களை கழற்றிவிட்டு அதன் கீழ் வெல்டிங் செய்து விவசாயம் செய்ய
தொடங்கினார்.
இதன் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்ட நிலத்தில் பரிமளம் எளிதாக சைக்கிள் மூலமாக
செய்த ஏர் கலைப்பையை வைத்து, தன்னுடைய 40 சென்ட் நிலத்தை உழுது
வெண்டைக்காய், கத்தரிக்காய், கீரை வகைகள், காராமணி, அவரை மற்றும்
பூச்செடிகளை பயிரிட்டு வருகிறார். அவருக்கு விவசாயத்தில் பட்டபடிப்பு படிக்கும்
அவருடைய மகன் புருசோத்குமார் விவசாய பணிகளுக்கு உதவி வருவதால், தொடர்ந்து பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து அவர் அசத்தி வருகிறார்.
கு. பாலமுருகன்







