காதல் திருமணத்தால் பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம் !

காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தினரை, மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அலசந்திராபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிமுக்கும்பட்டி பகுதியில், சுமார்…

காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தினரை, மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அலசந்திராபுரம் ஊராட்சிக்குட்பட்ட
சிமுக்கும்பட்டி பகுதியில், சுமார் 130க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி – மதி தம்பதியினரின் மகள் அபிராமி
என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினரான அத்தை மகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்

காதல் திருமணம் செய்து ஊருக்குள் வந்தால், ஊர் நிர்வாகிகள் கட்டப்பஞ்சாயத்து செய்து 50,000 அபராதம் விதித்துள்ளனர். இதனை கண்டித்து அபிராமி காதல் கணவருடன் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் இருவரும் திருமணம் செய்யும் வயதுடையவர்கள் என்பதால், யாரும் கேட்கக் கூடாது என ஊர் நிர்வாகிகளுக்கு
காவல்துறையினர் தரப்பில் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அறிவுறுத்தலை மீறி ஊர் நிர்வாகிகள் ரத்தினம், ராஜேந்திரன் மற்றும்
வெள்ளையன் உள்ளிட்ட சிலர், அபிராமியின் தாய் மதியை ஊரை விட்டு ஒதுக்கி
வைத்திருக்கின்றனர். அவருடைய வீட்டுக்கு செல்லும் வழியில் முள்வேலியை போட்டு போக விடாமல் தடுத்ததாகவும், மத்திய அரசு வழங்கிய இலவச வீடு கட்டி வரும் நிலையில், அதற்கு உண்டான கட்டுமான பொருட்களை ஏற்றி செல்வதற்கு கூட வழி விடவில்லை எனவும் கூறப்படுகிறது.

3 ஆண்டுகளாக எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதாக
வேதனை தெரிவிக்கின்றார். அதேபோல் தங்களுக்கு உதவி செய்ய முன் வரும் அதே
பகுதியை சேர்ந்த சுதா ,சின்னத்தம்பி ,தினகரன், ராஜா, வேலு உள்ளிட்ட ஆறு
குடும்பங்களையும் மூன்று வருடங்களாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும்
அபிராமி தெரிவித்துள்ளார்.

இதில் அரசு அதிகாரிகள் தலையிட்டு தங்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க,
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காவல்துறை
துணை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ,முதல்வர் தனிப்பிரிவு என தனித்தனியே
புகார் மனு கொடுத்துள்ளார். வாணியம்பாடி அருகே சுதந்திரம் அடைந்தும், ஊரை
விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் வேதனையும்
ஏற்படுத்தியுள்ளது.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.