சென்னையில் மதுபோதையில் போக்குவரத்து தலைமைக் காவலரை கல்லால் தாக்க முயன்ற நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கிண்டி போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் அருணகிரி, இன்று கிண்டி ஜவஹர்லால் நேரு சாலை ஒலிம்பியா தொழில்நுட்ப பூங்கா சிக்னல் அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலிருந்தார். கொரோனா தொடர்பான விழிப்புணர்வில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மதுபோதையில் அங்கு வந்த நபர், அருணகிரியிடம் சானிடைசர் கேட்டுள்ளார்.
சானிடைசரை காவலர் அவருக்கு கொடுத்த நிலையில், அந்த நபர் மீண்டும் அடிக்கடி சானிடைசர் கேட்டு தொந்தரவு செய்தபோது, அருணகிரி தர மறுத்தார். திடீரென அந்த நபர் கற்களை எடுத்து அருணகிரியை தாக்க முயன்றார். அதற்கு அருணகிரி தடுத்து, அந்த நபரை தள்ளிவிட்டதில், அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, ஆம்புலன்ஸில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் கிண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், போதையில் இருந்தவர் அசோக் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பது தெரிந்தது. இவர் ஏசி மெக்கானிக் வேலை செய்து வருவதும், மதுபழக்கத்திற்கு அடிமையாகி, கடந்த ஒரு வருடமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதும், தொடர்ச்சியாக போதையில் செல்லுமிடங்களில் தகராறு செய்து வருவதும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து போக்குவரத்து தலைமைக் காவலரை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்து, கல்லால் தாக்க முயன்றது தொடர்பாக, அருணகிரி கிண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.







