பொதுமக்கள் வீசிய கற்களைத் திரும்பி வீசிய பாழடைந்த பங்களா!

கடலூர் முதுநகரில் பாழடைந்த பங்களாவிலிருந்து வீடுகளின் மீது கற்கள் விழுந்த நிலையில், மஞ்சள், குங்குமம் தடவி பொதுமக்கள் வீசிய கற்களும் திரும்பி வந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடலூர் முதுநகர் பென்ஷனர்…

கடலூர் முதுநகரில் பாழடைந்த பங்களாவிலிருந்து வீடுகளின் மீது கற்கள் விழுந்த நிலையில், மஞ்சள், குங்குமம் தடவி பொதுமக்கள் வீசிய கற்களும் திரும்பி வந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கடலூர் முதுநகர் பென்ஷனர் லைன் தெருவில் பாழடைந்த பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களாவைச் சுற்றிலும் தென்னை மரங்கள் உள்ள நிலையில் ஆள் நடமாட்டமின்றி காணப்படும். இந்த பங்களா, பல ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கும் நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பங்களாவிலிருந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் கற்கள் வந்து விழுந்தபடி இருந்துள்ளன. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், பங்களா அருகில் செல்லவே அச்சமடைந்துள்ளனர்.

அடுத்தடுத்த நிகழ்வுகளால், அச்சமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் பங்களாவுக்குள் இருந்து மர்மநபர்கள் யாரேனும் கற்களை வீசுகிறார்களா? எனச் சோதனை செய்வதற்காக அந்த பங்களாவுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த பங்களாவுக்குள் யாரும் இல்லை என்பதனை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், மர்மநபர்கள் வந்து சென்றதற்கான எந்த வித அடையாளமும் அங்குக் காணப்படவில்லை எனக் கூறியுள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘‘உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு’ – தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர்’

இதையடுத்து அப்பகுதி மக்கள் மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய கல்லை, அந்த பங்களாவுக்குள் வீசியுள்ளனர். சில நிமிடங்களில் அந்த கல்லும், பங்களாவுக்குள் இருந்து மீண்டும் வீசிய இடத்துக்கே வந்து விழுந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பங்களா முன்பு ஒன்று திரண்டுள்ளனர். பின்னர் போலீசார் வந்ததும், அந்த பாழடைந்த பங்களாவுக்குள் சென்று பார்த்துள்ளனர். ஆனால், பங்களா முழுவதும் தேடியும் அங்கு யாரும் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

மேலும், ட்ரோன் மூலமாகவும் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால், ஒருவர் கூட சிக்கவில்லை என்பதால், தொடர்ந்து போலீசார், சென்னையில் வசிக்கும் அந்த பங்களாவின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, பாழடைந்து கிடக்கும் பங்களாவைச் சுத்தம் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் மக்கள் பங்களா குறித்துப் பீதியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.