திருமணத்திற்கு பிறகான கட்டாய உறவு தொடர்பான வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்

திருமண பாலியல் வன்கொடுமைகளை குற்றச் செயலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் 375 பிரிவின் படி திருமணத்துக்கு…

திருமண பாலியல் வன்கொடுமைகளை குற்றச் செயலாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டம் 375 பிரிவின் படி திருமணத்துக்கு பின்னர் மனைவியின் விருப்பத்துக்கு எதிராக அவருடன் கணவர் உறவு வைத்தால் அதை பாலியல் குற்றமாக கருத முடியாது என விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், ரிட் பவுண்டேசன் உள்ளிட்ட சில தனியார் அமைப்புகள் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜிவ் சக்தேர் மற்றும் ஹரிசங்கர் அடங்கிய அமர்வு இருவேறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.

அதன்படி , இந்திய தண்டனை சட்டம் நடைமுறைக்கு வந்து 162 ஆண்டுகளுக்கு பின்னரும் திருமணமான பெண்களின் நீதிக்கான குரலை கேட்கவில்லை என்றால் அது மிகவும் துன்பகரமானது, எனவே, மனைவியின் விருப்பமில்லாமல் கணவன் உறவு கொண்டால் அதை குற்றமாக தான் பார்க்க வேண்டும் என்றும், கணவனுக்கு எதிராக பாலியல் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி ராஜிவ் சக்தேர் தீர்ப்பு வழங்கினார்.

அதே சமயம், திருமணத்துக்கு பின்னர் மனைவியின் விருப்பம் இல்லாமல் உறவு வைத்துக்கொண்டால் அது இந்திய தண்டனைச் சட்டம் 375வது பிரிவின்படி பாலியல் வன்கொடுமை குற்றமாக கருத முடியாது என்று நீதிபதி ஹரி சங்கர் மற்றொரு தீர்ப்பை வழங்கினார். இந்த இருவேறு மாறுபட்ட தீர்ப்பை எதிர்த்து இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் மற்றும் ரிட் பவுண்டேசன் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் அஜய் ரஸ்தோஹி, பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கு மீதான விசாரணையை 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.