ஜன நாயகன் தணிக்கை விவகாரம் ; வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம்……!

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பாக மறு ஆய்வு குழுவை அணுகி உள்ளதால், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை பட தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

விஜய் – ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படம் தணிக்க்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று ஜனவரி 9ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு அனுப்பி உத்தரவிட்டார். மேலும் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பியதை எதிர்த்து திருத்த மனு தாக்கல் செய்ய பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக மறு ஆய்வு குழுவை அணுகி உள்ளதால், தனி நீதிபதி முன் உள்ள வழக்கை திரும்ப பெற உள்ளதாக கூறி, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்ற பதிவு துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

அதன் படி இந்த வழக்க்கில் இன்று  நீதிபதி ஆஷா முன் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்டார். வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.