தனியார் கல்லூரி நிர்வாகி குறித்து அவதூறு பரப்பிய இருவர் மீது வழக்குப்பதிவு!

கோவை தனியார் கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி மீது அவதூறு பரப்பி பணம் கேட்டு மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த…

கோவை தனியார் கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி மீது அவதூறு பரப்பி பணம் கேட்டு மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அனுஷா ரவி என்பவர் கருமத்தம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். கடந்த 2023 டிசம்பர் 21ஆம் தேதி அனுஷா ரவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கைரா லைஃப்ஸ்டைல் என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில் 24 மணி நேரத்தில் 50 லட்சம் ரூபாய் பணம் தரவில்லை என்றால் உங்களை குறித்து 100 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அவதூறு செய்தி பரப்படும் என மிரட்டல் விடுக்கப்பபட்டிருந்தது. அதேபோன்று கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி அவரது கல்லூரி இணையதள முகவரிக்கு அனுஷா ரவி பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாக புகார் செய்தி அனுப்பப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து டிசம்பர் 31ஆம் தேதியன்றும் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இதேபோன்று அவதூறான செய்தியை அனுப்பியதாக அனுஷா ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் கோவை ராமநாதபுரம் போலீசார், யுவராஜ், பரிமளா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுஷா ரவி மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அண்மையில் பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.