புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும் என்று புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள்புதுச்சேரி வழக்கறிஞர்கள் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர் (பொறுப்பு) ராஜா, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நீதிமன்றத்தில் அதிக நேரம் மக்கள் செலவிடக் கூடாது. மக்களுக்கு நீதி விரைந்து கிடைக்க செய்வது அவசியம். நீதிமன்றம் நவீனப்படுத்தப்பட வேண்டும். அதற்கு நீதிமன்றங்களில் தரமான 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும். நீதித்துறைக்கு அனைத்து வித ஒத்துழைப்பையும் அரசு தரும் என்று உறுதியளித்தார்.நீதித்துறைக்கும், அரசுக்கும் பிரச்சினை என்று கூறுவது தவறானது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சுமூக உறவே உள்ளது. புதுச்சேரிக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை அல்லது பென்ஞ் நிச்சயம் அமைத்து தரப்படும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதியளித்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசும்போது, உள்ளூர் மொழியில் நீதிமன்றத்தில் வாதாட வேண்டும். தமிழில் வாதாடுவது சிறப்பாக இருக்கும். இதில் பல சிக்கல்கள் இருந்தாலும் மக்களுக்கு இது மிக உதவியாக இருக்கும். நீதித்துறையில் பணியாற்ற அதிகளவில் பெண்கள் வரவேண்டும் என்று கூறினார்.