பவானி அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கிய நிலையில் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஊமாரெட்டியூர் சுந்தராபாளையம் பகுதியை சேர்ந்த குருசாமி சரண்யா இந்த தம்பதியினர் கூலித் தொழில் செய்து வருகின்றனர் இவர்களுக்கு இரண்டு மகள்கள்,ஒரு மகன் உள்ளனர். இதில் 1ம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகன் அபினேஷ் வீட்டின் எதிரே உள்ள இடத்தில் விளையாடுவது வழக்கம்.
இதற்கிடையே ராமகிருஷ்ணன் என்பவர் புதியதாக வீடு கட்டுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை அடித் தளத்திற்கு 8 அடி பள்ளம் தோண்டி உள்ளார். இதையடுத்து நேற்று மாலை நேரத்தில் மழை பெய்தது காரணமாக பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் அதன் அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இரவில் தீடிரென மகன் அபினேஷை காணவில்லை என பெற்றோர் தேடி பார்த்த நிலையில் பள்ளத்தில் இறங்கி தேடியபோது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

இது குறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.







