மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு தலைமுறை கண்ட 98 வயது மூதாட்டி, தனது 105 வயது சகோதரியுடன் ‘கேக்’ வெட்டி தனது பிறந்தநாளை சொந்தங்களுடனும், அவர் வசிக்கும் கிராம மக்களுடனும் இணைந்துக் கொண்டாடிய நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்த ராசு – வேலாயி தம்பதியினருக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் கணவர் ராசு அவரது 93 வயதில் இயற்கை எய்திய நிலையில், பிள்ளைகளுடன் வசித்து வரும் வேலாயிக்கு தற்போது 98 வயது ஆகிறது. சதம் அடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், பாட்டியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட முடிவெடுத்த அவரது பேரன், பேத்திகள், அதன் படி வேலாயி அம்மாள் இல்லத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை தடபுலராக செய்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேலாயி அம்மாளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ‘கேக்’ வெட்டப்பட்டதோடு, மகன், மகன் வழி பேரன், பேரனின் மகன்கள், பேத்திகள் என வேலாயி பாட்டியின் வழிவந்த நான்கு தலைமுறையினர் வந்திருந்து வாழ்த்தியது மட்டுமன்றி,அவரிடம் வாழ்த்தும் பெற்றனர். இதில் கூடுதல் சிறப்பாக அந்தப் பாட்டியின் அக்காவான கருப்பாயி பாட்டியும் பங்கேற்றதோடு, அவர் வசிக்கும் கிராம மக்களும் கலந்து கொண்டு வேலாயி பாட்டியை வாழ்த்தினார்கள்.
குறிப்பாக, வேலாயி பாட்டியின் அக்காவான கருப்பாயி பாட்டிக்கு தற்போது 105 வயது ஆகிறது. வயது கூடினாலும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பு என்றும் குறைந்திடாது என்பதற்கு ஏற்ப, 98 வயது மூதாட்டி பிறந்தநாள் விழாவில் 105 வயதான அவரது
சகோதரியும் பங்கேற்று வாழ்த்திய நிகழ்வு அவ்வூர் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, நாற்பதிலேயே அனைத்தும் முடிந்து விரக்தி நிலையில் பிறந்த நாளைக் கொண்டாட கூடமனமின்றியும், நேரமின்றியும் இருக்கும் இன்றைய தலைமுறையினரை
இந்நிகழ்வு ஆச்சர்யப்படுத்தி உள்ளது. தற்போது 2 மூதாட்டிகளுடன் அமர்ந்து அவர்களது குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது
- பி.ஜேம்ஸ் லிசா