வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி, வழங்கும் ரெப்போ வட்டி உயர்த்தப்படவில்லை எனவும், பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5% இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகளை மும்பையில் அறிவித்த, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், தற்போதைய ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் தற்போதைய ரெப்போ வட்டி விகிதமான 6.5% எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று அவர் கூறினார்.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாததால் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், செலுத்த வேண்டிய வட்டி விகிதம் உயராது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் இருந்ததை விட நாட்டின் பொருளாதாரம் தற்போது அதிக வேகத்தில் வளர்ந்து வருவதாக கூறிய சக்தி காந்ததாஸ், சர்வதேச பொரளாதார நிலைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 % ஆக இருந்ததாகவும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (GDP) 6.5 % ஆக இருக்கும் எனவும் கூறினார். நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 595.1 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளதாகவும், வெளிநாட்டு பயணங்களின் போது பயன்படுத்தும் வகையில் ரூபே ஃபோரெக்ஸ் கார்டு அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறினார்.
பணவீக்கத்தை 4 சதவீதமாக குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5 சதவீதத்திற்கு மேல் இருக்கும் எனவும் கூறினார். மேலும், இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நுகர்வோர் பணவீக்க விகிதம் 4.7 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், நவம்பர் 2021-ம் ஆண்டுக்கு பிறகு மிகக் குறைந்த அளவு இது எனவும் கூறினார்.
வர்த்தக துறையில் 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிதி பரிமாற்றம், 2.7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், கால நிலை மாற்றம், எல் நினோ விளைவால் அதிகரிக்கும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் எனவும், மொத்த பணவீக்கம் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.
பொதுமக்கள் அவர்கள் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ந் தேதி வரை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ வங்கிக் கிளைகளை அணுகலாம் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. இந்நிலையில், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என இணையத்தில் பரவிவரும் தகவல் போலியானது.