செங்கல்பட்டு மாவட்டம் வெங்கடாபுரம் பகுதியில் மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்து, 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது 6 வயது மகன் பிரதீஷூடன் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, சிறுவன் திடீரென காணாமல் போகவே, சுற்றியுள்ள பகுதியில் அவர் தனது மகனை தேடியுள்ளார்.
அப்போது, ஊராட்சி அலுவலக வளாகத்தில் திறந்த நிலையில் இருந்த செப்டிக் டேங்க்கில், சிறுவன் பிரதீஷ் மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
வெங்கடாபுரம் ஊராட்சி நிர்வாகம் செப்டிக் டேங்கை மூடி வைக்காமல் அலட்சியமாக இருந்ததே, 6 வயது சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.







