மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி கேரளாவிற்கு அடிமாட்டிற்கு அனுப்பிய
வடமாநில கும்பல் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் திரியும் காளைகள்
மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை வாகனங்களில் இரவு நேரங்களில் கடத்துவதாக
தொடர்ந்து புகார்கள் வந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோன்று மதுரையில் விளாங்குடி, சிக்கந்தர்சாவடி, எஸ்.எஸ்காலனி உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு மாதங்களில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தும்
சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இதனை தடுப்பதற்காக மாநகர் எல்லை பகுதிகளில் வாகன சோதனையை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி நள்ளிரவில் கூடல்புதூர் சோதனை சாவடியில் மாடுகளுடன் வந்த சரக்கு வாகனத்தை காவல் உதவி ஆய்வாளர் தவமணி தடுத்து நிறுத்த முயன்றார்.
அப்போது வாகனத்தை நிறுத்தாமல் மாடுகடத்தல் கும்பல் அதிவேகமாக வந்து
பேரிகார்டரில் மோதி நிற்காமல் சென்றுவிட்டனர். இதில் சார்பு ஆய்வாளர் தவமணின் இடது காலில் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு
செய்த கூடல் புதூர் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை
கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்து ஏற்படுத்திய தினம் மதுரையில் பல்வேறு பகுதிகளில் மாடு திருடு போனதாக
புகார் எழுந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், பரவை சோதனை சாவடியில்
வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி
காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்திய நிலையில் தாராபுரம் பகுதியில் ஒரு
கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அங்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர் பதுங்கி இருந்த ஹரியானா மாநிலத்தைச்
சேர்ந்த நாசிர், இர்பான், ஜூபைர், ஷாகுல், ஹக்முதீன் ஆகிய 5 பேரையும் கைது
செய்த காவல்துறையினர் மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில்
திரியும் மாடுகளையும், வீட்டிற்கு வெளியே கட்டிப் போட்டு இருந்த ஜல்லிக்கட்டு
காளைகளையும் திருடி ஒட்டன்சத்திரம் கொண்டு சென்று விடுவதாகவும், அங்கிருந்து
கேரள வியாபாரிகள் அடி மாட்டிற்கு கேரள மாநிலத்திற்கு வாங்கி
சென்றுவிடுவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் மாடுகளை கடத்தி செல்ல பயன்படுத்திய வாகனத்தையும் ,
11ஆயிரம் ரூபாயை பறிமுதல்செய்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
சிறையில் அடைத்தனர். வடமாநிலத்தில் இருந்து கும்பல், கும்பலாக தமிழகத்தை நோக்கி படையெடுத்து வரும் நபர்களின் நினைத்து கூட பார்க்க முடியாத வகையிலான திருட்டு வேலைகள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து இந்த கும்பலுக்கு வேறு ஏதேனும் மாடுகள் கடத்தல் வழக்குகளில்
தொடர்பில் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.