தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் கொலை: உதயநிதி கண்டனம்!

தமிழகத்தில் ஒரே நாளில் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் மக்களுக்கும் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனக் கூறி தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் திமுக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒரே நாளில் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டதாகக் கூறி, தவெக அரசைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,

“இந்த தவெக ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த TVK CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன். TVK CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள், காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.

இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை. கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும், தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம். ஆய்வு செய்தேன், ஆபிஸரை நியமித்தேன் என்றும், தி.மு.க –தி.மு.க என்றும், இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்? தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும், ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.