தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) செந்தில் குமார், தனது பணியை முடித்துவிட்டு சீருடை அணியாமல் சாதாரண உடையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பொதுமக்கள் நடமாடும் சாலையில் இளைஞர்கள் கொண்ட கும்பல் பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சாலையை விட்டு விலகிச் செல்லுமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய SSI செந்தில் குமார், அவர்களின் செயல்களைத் தனது கைபேசியில் வீடியோ எடுக்க முயன்றார்.
தாக்குதலில் நிலைகுலைந்து விழுந்த SSI
அந்த இளைஞர்களில் ஒருவரைப் பிடிக்க முயன்றபோது, ஒரு நபர் செந்தில் குமாரைத் தனது முழங்கையால் தாக்கியதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த ரோந்துப் படை போலீசார், அவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
4 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை!
இச்சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்ட தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிரவீன் கவுதம், அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பறிமுதல் செய்த போலீசார், போலீஸ் எஸ்.எஸ்.ஐ.யைத் தாக்கிய கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக 4 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் அதிகாரியே தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த SSI செந்தில் குமாருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.




