நடப்பு கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடி காரணமாக தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படாத நிலையில், 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடப்பு கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
மேலும், கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 11-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதவிருந்த மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டில் 7 மாதங்களுக்கு மேல் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் மாணவர்கள் பாடங்களை படித்து வந்ததாகவும், மாணவர்களின் பாடச்சுமையை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை கேட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால் மதிப்பெண் கணக்கீடு தொடர்பான வழிகாட்டுதல்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற செய்த முதல்வர் பழனிசாமிக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் நன்றியினைத் தெரிவித்து கொண்டார்.







