தமிழக மக்களுக்கு நன்மை தரும் தேர்தல் அறிக்கையை அதிமுக விரைவில் வெளியிடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி பகுதியில் பிரச்சாரத்தில் பேசிய அவர், மு.க.அழகிரி கட்சி தொடங்கினால் திமுக உடையும் என்றார்.
7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாகக் கூறினார். அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கிராமசபைக் கூட்டங்களை நடத்தி மக்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஒரு கட்சிக்காக
கட்சியை அடமானம் வைக்காதீர்கள் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை விமர்சித்தார்.
தொடர்ந்து பெருந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,பெருந்துறை தொகுதி மக்களின் 50 ஆண்டுகால கனவான அத்திகடவு அவினாசி திட்டத்தை மாநில அரசு நிதியில் நிறைவேற்றி உள்ளதாகவும், இதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் இப்பகுதி டெல்டா போல் பசுமையாக காட்சி அளிக்கும் எனவும் கூறினார். ஊழல் குற்ற்சசாட்டுகளை கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலினை நேருக்குநேர் விவாதத்திற்கு அழைத்தால் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி வராமல் தட்டி கழிப்பது குறித்து விமர்சனம் செய்தார்.







