திருப்பரங்குன்றம் விவகாரம் : தமிழக அரசு சீராய்வு மனு : திருமாவளவன் வரவேற்பு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவைத் தாக்கல் செய்த தமிழக அரசின் நேர்மையான நிலைபாட்டினை விசிக வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது, “திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள பிள்ளையார் கோயிலின் முன்பு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதை யாரும் எதிர்க்கவில்லை. இந்த ஆண்டும் வழக்கம்போல அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும்.

ஆனால், வம்பிழுப்பவர்கள் வழக்குத் தொடுத்திருப்பது அருகிலுள்ள தர்காவுக்குச் செல்லும் வழியில் நிற்கும் ஒரு கல்தூணில் ஏற்றுவோம் என்றுதான். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தீர்ப்பு மதுரையில்நிலவும் நல்லிணக்கமான சூழலைப் பாதிக்கும் வகையிலான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏனெனில், விசாரணையைத் தொடங்காமலேயே, ஆதாரங்களை ஆய்வு செய்யமலேயே நிபந்தனையுடன் இப்போதைக்கு அந்த தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதே ஆகும்.

வழக்கமாக, ஆய்வுக்கு முன்னர் இடைக்காலத் தீர்ப்பு, ‘ஸ்டேட்டஸ் க்வா’ (Status qua) -இருக்கும் நிலையே தொடரட்டும்-என்றே வழங்குவர். ஆனால், இந்த தீர்ப்பு அவ்வாறின்றி இறுதி தீரப்பு இப்படி தான் இருக்கும் என சொல்லாமல் சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், இதனை எதிர்த்து சீராய்வு மனுவைத் (ரிவீயூ) தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. அரசின் நேர்மையான இந்த நிலைபாட்டினை விசிக வரவேற்கிறது.

அத்துடன் , இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து மதுரையில் நாளை (நவ-23) மாலை நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில் விசிக சார்பில் நான் பங்கேற்கிறேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.