“கட்சியின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் அதிமுகவை காப்பாற்ற முடியாது”: நத்தம் விசுவநாதன் எச்சரிக்கை

கட்சியின் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளாவிட்டால் அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று நத்தம் விசுவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பழனியில் அதிமுக நிர்வாகியின் ​முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விசுவநாதன் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் தற்போதைய நிலை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

​கட்சிக் கலாச்சாரமும், சந்திப்பும்
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் சந்தித்துப் பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த நத்தம் விசுவநாதன், அது அண்ணா திமுகவின் கலாச்சாரத்திற்கும், இதுவரை அக்கட்சி பின்பற்றி வந்த வழிமுறைகளுக்கும் நேர் புறம்பானது என்று தெரிவித்தார். திமுகவுடன் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்பதே எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் கொள்கையாக இருந்தது என்றும், ஆனால் இன்றைய தலைமை திமுகவினருடன் இணைந்து சிரித்து மகிழ்ந்து, அதைப் பெருமையுடன் வெளியிடுவதைத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் எடப்பாடி பழனிசாமியை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியிருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

​தொடர் தோல்விகள் மற்றும் நிர்வாகிகள் நீக்கம்அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் தோல்விகளில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளை எடுப்பதற்குப் பதிலாக, நாளுக்கு நாள் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படும் வகையிலேயே தலைமை செயல்பட்டு வருவதாக விமர்சித்தார். தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக, முக்கிய நிர்வாகிகள் தொடங்கி தற்போது கிளைச் செயலாளர்கள் வரை நூற்றுக்கணக்கானோரை நீக்கி வருவது கட்சிக்குத்தான் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

​அரவணைப்புக்கான கோரிக்கை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இணைந்து, ஜெயலலிதா காலத்தில் கட்சியில் இருந்த அனைவரையும் மீண்டும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும், யாரையும் நீக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்ததை நத்தம் விசுவநாதன் நினைவுகூர்ந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதைக் காதில் வாங்காமல், தாழ்வு மனப்பான்மை காரணமாகப் பலரையும் எதிரிகளாகப் பாவித்து நீக்கிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

​திருந்த வேண்டிய நேரம்
எடப்பாடி பழனிசாமி தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, கடந்த கால நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்து, அனைவரையும் மீண்டும் அரவணைத்துச் சென்றால் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மாறாக, இதே நிலையிலேயே அவர் தொடர்ந்து சென்றால், அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று நத்தம் விசுவநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.