அரசு குடோனில் இருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமாகி உள்ளது குறித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தர்மபுரி அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமாகி உள்ளதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறி உள்ளார். சர்க்கரையை எறும்பு தின்றது, கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பி உள்ள அவர், நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
தருமபுரியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7,000 நெல்மூட்டைகள் மாயமானதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள் நெல்மூட்டைகள் மாயமானதை உறுதி செய்துள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தகவலை மறுக்கும்…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 30, 2023
தருமபுரியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7,000 டன் நெல்மூட்டைகள் மாயமானதை விஜிலென்ஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நெல் மூட்டைகள் உண்மையிலேயே காணாமல் போனதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை கண்டறிய முதலமைச்சர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படியுங்கள் : எண்ணற்ற விமர்சனங்கள் : எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கிய CSK – திஸ் இஸ் ரியல் கம்பேக்..!!
இதனிடையே, 7,000 டன் நெல் மூட்டைகள் காணாமல் போனதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர், இன்று அரசு குடோனில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.







