ராணிப்பேட்டை அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேச்சேரி அடுத்த மாமண்டூர் பகுதியை சேர்ந்த சின்ராசு, கோகுல், சுபாஷ், ரமேஷ், நந்தகுமார், விஸ்வநாதன் உள்ளிட்ட 7 பேர் அருகே உள்ள பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேம்பாலத்தில் இருந்தபடி ஆற்றில் குதித்த ஏழு பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். விழுந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு பாறையை பிடித்துக் கொண்டு தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் இணைந்து ரப்பர் படகின் உதவியுடன் ஏழு பேரையும் பத்திரமாக மீட்டனர்.
இதற்கிடையே தகவலறிந்து அங்கே சென்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் ஏழு பேரையும் மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் அதிகபடியான வெள்ளம் வந்து கொண்டிருப்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் எனினும் இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
மேலும், பாலாற்றில் வெள்ளம் குறையும் வரை இளைஞர்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர் குழந்தைகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நீர்நிலைகளுக்கு செல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.