கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை தொடர்ந்து கோதையார் மலை பகுதியில் ஆறு மாத யானை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குமரியில் நேற்று முதல் மழை பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் ஆகிய அணைகளில் இருந்து வெளியேற்றப் படும் உபரிநீரின் அளவு குறைந்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 5,892 கன அடி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 4,852 கன அடி நீரும், சிற்றார் ஒன்று அணையில் இருந்து வினாடிக்கு 272 கன அடி நீரும், சிற்றார் 2 அணையில் இருந்து வினாடிக்கு 224 கன அடி தண்ணீர் மட்டுமே தற்போது வெளியேற்றப்படுகிறது.
இதனால் கோதையார், தாமிரபரணி மற்றும் பரளியாற்றிலும் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் குடியிருப்புகளில், விளை நிலங்களில் புகுந்த தண்ணீர் குறையத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் விடுமுறை அறிவித்துள்ளார்கள்.
மாவட்டத்தில் மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 16 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்த பேச்சிபாறை அணையில் இருந்து 5892 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அது போன்று பெருஞ்சாணி அணையிலிருந்து 4852 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரைகளில் தண்ணீர் வடிந்தாலும் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி விவசாயம் நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோதையார் மலை பகுதியில் ஆறு மாத யானை ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த யானையின் உடல், மோதிர மலை நீர் நிலை பகுதியில் கரை சேர்ந்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக அதி கன மழை பெய்து வருகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்ய வேண்டிய மழை பொழிவில் 95% தற்போது பொழிந்துள்ளது.
அதேபோல் 80 முதல் 90 சதவீதம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அணைகள் நிரம்பி உள்ளது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு நதிகளின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









