கன்னியாகுமரி அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் சிக்கிய 3 மாத இரட்டை குழந்தைகளை பாத்திரத்தில் வைத்து தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பருவ மழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதோடு அணைகளும் வேகமாகை நிறைந்து வருகிறது.
இதனால், பிரதான அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் ஆறுகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை குளச்சல் பகுதியில் உள்ள வெள்ளியாக்குளம் திடீரென உடைந்ததால் குளத்தில் உள்ள வெள்ள நீர் அருகில் உள்ள சிங்கன்காவு குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததோடு வீட்டிற்குள்ளும் புகுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வீட்டிற்குள் சிக்கி இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த நிலையில், அந்த குடியிருப்பில் அர்ஜூணன் என்பவர் வீட்டிற்குள் இடுப்பளவு வெள்ள நீர் புகுந்த நிலையில் அந்த குடும்பத்தினர் 3-மாத இரட்டை கை குழந்தையுடன் வீட்டில் சிக்கி தவித்த நிலையில் தீயணைப்பு துறையினர் அந்த குழந்தைகளை இடுப்பளவு வெள்ளத்தில் பத்திரமாக அண்டாவில் வைத்து மீட்டனர். தொடர்ந்து வெள்ளம் புகுந்து வருவதால் வீடுகளின் தரைத்தளம் முழுவதும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.







