சோழிங்கநல்லூரில் உள்ள 7 ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேங்கை வாசல் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு…

சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேங்கை வாசல்
ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் குடியரசு தினத்தை முன்னிட்டு
நடைபெற்றது. சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற இந்த கிராம சபை கூட்டத்தில்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளை, தாம்பரம் மாநகராட்சியுடன் இன்னும் 2 வருடங்களில் இணைக்க உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் கிராமசபை கூட்டங்களை முன்னெடுத்து நடத்தியதாகவும், தற்போது வருடத்திற்கு ஆறு முறை மக்கள் குறைகளை தீர்க்க கிராம சபை கூட்டம் நடத்தி வருவதாகவும் கூறினார் .

மேலும் கொரோனா பாதிப்புக்கு பிறகு புதிய புதிய நோய் தொற்றுகள் தமிழகத்தில் அதிகமாக உள்ளதாக தெரிவித்த அவர் , தற்பொழுது டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வருவதாகவும், டெங்கு காய்ச்சலை ஊராட்சிகளில் குறைக்க பொதுமக்கள் அவரவர் வீட்டில் பாதுகாப்பான சூழ்நிலையை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அப்போது தேவை இல்லாத இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய நிலையை மாற்றி, தண்ணீரில் இல்லாத நிலையை உருவாக்கினால் டெங்கு இல்லாத ஊராட்சியை உருவாக்கலாம் என்றும் அறிவுரை வழங்கினார். பின்னர் வேங்கை வாசல் ஊராட்சியில் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மக்களிடம், அவர்களின் குறைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தார்.

மேலும் வேங்கைவாசல் ஊராட்சியில் முதியோர் காண உதவித்தொகை ,தெருநாய்கள் பிரச்சனை, சாலை சீரமைப்பு, மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் , மின்சாரம், தெரு விளக்கு, வீட்டுமனை பட்டா, ஊனமுற்றோர் தொகை, விதவை பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு குறைகளை அமைச்சர் முன்னிலையில் முன் வைத்ததோடு, கோரிக்கை மனுவாகவும் அமைச்சரிடம் வழங்கினர்.

இதனைதொடர்ந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் வேங்கை வாசல் மக்களின் குறைகள் ஒவ்வொன்றாக ஆராய்ந்து , அதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அப்போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் அரவிந்த் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.